எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைச் சார்பாக 21.02.2022 திங்கட்கிழமை ’உலகத் தாய்மொழி நாள்’ விழா கொண்டாடுவது குறித்து துறைக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. அதன்படி தமிழ்த்துறையின் மூத்த பேராசிரியரும் துணைமுதல்வருமான பேரா. கா. மதியழகன் ஜயா அவர்களிடம் விழா நடத்த கோரியபொழுது, முதல்வர் அவர்களிடம் விழா நடத்துவது குறித்து அனுமதி கேட்டபொழுது விழா நடத்த வேண்டிய அனைத்து முன்னெடுப்புகளையும் அனுமதியும் வழங்கினார்கள்.
விழா இணையவழியில் நடத்த ஜூம் (குவியம்) செயலி, தகவல்தொடர்பியல் இயக்குநர் அனுமதி பெறப்பட்டது. விழா குறித்த நேரத்தில் தொடங்கப்பெற்று தமிழ்த்துறையின் தலைவர் (பொறுப்பு) முனைவர் கி. சுந்தரராஜ், உதவிப்பேராசிரியர் அவர்கள் ’உலகத் தாய்மொழி நாள் கொண்டாடுவதில் எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தமிழ்த்துறையும் பெருமிதம் கொள்கிறது’ என்பதோடு தமிழின் தொன்மை சிறப்பினையும் குறிப்பிட்டதோடு அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கல்லூரியின் முதல்வர் பேரா. முனைவர் இரா. வாசுதேவராஜ் ஐயா அவர்கள் ’உலகத்தாய் மொழி நாள்’ விழா கொண்டாடுவதன் அடிப்படைக் காரணமாக வங்கத்தில் நடந்த மொழி கலவரம் குறித்து விரிவாக எடுத்துக்கூறி தமது தலைமையுரையினை வழங்கினார்கள்.
தொடர்ந்து தமிழ்த்துறையின் பேராசிரியரும் துணைமுதல்வருமான பேரா. கா. மதியழகன் ஐயா அவர்கள் தாய் மொழியின் இன்ன்றியமையாமையையும் கதையின் மூலம் எடுத்துக்காட்டி, தமது வாழ்த்துரையினை வழங்கினார்கள். விழாவின் சிறப்புரையாளர் நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி தமிழ்த்துறையின் இணைப்பேராசிரியர் பேரா. முனைவர் க. ஜெயபாலன் ஐயா அவர்கள் ‘தாய்மொழியின் சிறப்புகள்’ எனும் பொருண்மையில் எட்டு நிலைகளில் தமிழ்மொழியின் வரலாறு, மொழியின் அரசியல். மொழியும் மனித உடலமைப்பும், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டையப் பெருமையும் இன்றைய நிலையும், மொழியின் அதிகாரம், மேலைய நாட்டுத் தனிநபர் வாழ்வும்-கீழைநாட்டு இனக்குழு வாழ்வும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிஞர்கள் கூறிய கருத்துக்கள், இனியும் எழுதப்பட வேண்டியவை என தொகை, வகை விர என்றவாறு வகைப்படுத்தி விளக்கி தமது செம்மாந்த உரையினை வழங்கினார். விழாவின் நிகழ்வினைத் தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் ஜெ.முனுசாமி ஐயா அவர்கள் நிரல்படுத்தி சிறந்த முறையில் தொகுத்து வழங்கினார்.
ஜூம் (குவியம்) செயலி வழியாகக் கணினித் துறையின் உதவிப்பேராசிரியர் திரு. கண்ணன் அவர்களும் தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் கு.கமலக்கிருஷ்ணன் அவர்களும் இணைய இணைப்புவழி நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்கள்.
இந்நிகழ்விற்கு எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள், மாநிலக் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறையின் தலைவர் முனைவர் மகாலிங்கம் ஐயா உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் திரளாகக் கலந்து கொண்டு ’உலகத் தாய்மொழி நாள்’ விழாவினைச் சிறப்பித்தார்கள். விழா நன்றியுரையுடன் இனிது நடந்தேரியது.
சிறப்பு விருந்தினர் அவர்களுக்குக் கல்லூரியின் சார்பாக நினைவுப் பரிசும் பொன்னாடையும் வழங்குமாறு முதல்வர், துணைமுதல்வர் அவர்களும் பணித்தவாறு தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் நேரில் சென்று பேரா. முனைவர் க. ஜெயபாலன் ஐயா அவர்களுக்குச் சிறப்பு செய்தார்கள்