நமது கல்லூரி 29 ஆண்டுகளைக் கடந்து 30ஆம் ஆண்டில் முத்து விழாவினை நோக்கி வெற்றி நடையோடு பயணித்துக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே ISO 9001: 2015, தரச்சான்று பெற்றிருந்த நிலையில், சென்ற மாதம் தேசிய மதிப்பீட்டுக் குழுவினரால் முதன் முறையிலேயே A+ (NAAC) தரச்சான்றைப் பெற்ற பெருமைக்குரிய நமது கல்லூரியில் இவ்வாண்டு தமிழ்த்துறையின் சார்பில் 20.02.2023 திங்கட்கிழமை முனைவர் தி.பொ.கணேசன் கலையரங்கத்தில் முத்தமிழ் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. முத்தமிழ் விழாவோடு தமிழ்த்துறையின் நெடுநாளைய கனவு, ‘இதழ்’ ஒன்றினைத் தொடங்க வேண்டுமென்பதாகும். தமிழர்களின் பிறவி தொட்டு உயிர்ப்பிரியும் காலம் வரையிலான வாழ்வில் உணவு, உடை, உறையுள் உள்ளிட்ட அகப்புற வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ள பனைமரத்தின் பெருமையினைப் பறைச்சாற்றும் வகையில் ‘பனைநிலம்’ எனும் பெயரில் காலாண்டு இதழையும் வெளியிட்டு மகிழ்ந்தது. தமிழகத்தின் தலைமை மரம் ‘பனைமரம்’ என்றும் ‘கற்பகத்தரு’ என்றும் போற்றப்படும் ‘பனைநிலம்’ எனும் இவ்விதழில் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, கவிதை, ஓவியம், நூல் மதிப்புரை, ஆய்வுக்கட்டுரை ஆகிய பொருண்மைகளில் பேராசிரியர்களும் மாணவர்களும் தங்களது படைப்புகளின் வழி இவ்விதழ் கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் சிறப்பு விருந்தினர்களால் குத்து விளக்கேற்றி தொடங்கிய இவ்விழாவில் முனைவர் கி. சுந்தரராஜ் துறைத்தலைவர் (பொ) வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து துணைமுதல்வரும் தமிழ்த்துறையின் மூத்த பேராசிரியர் கா.மதியழகன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.வாசுதேவராஜ் ‘பனைநிலம்’ இதழை வெளியிட்டு முத்தமிழ் விழா தலைமையுரையினை வழங்கினார். இவ்விழாவில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் சி. கார்த்திகேயன் (நாடகம் மற்றும் அரங்கக் கலைத்துறை & இதழியல் மற்றும் புதிய ஊடகப் பள்ளி) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இதழின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு சிறந்ததொரு சிறப்புரையை நிகழ்த்தினார். இரண்டாம் பிரதியை லயோலா கல்லூரியின் கலை இலக்கியத்துறை, பேராசிரியர் முனைவர் இரா. காளீஸ்வரன் (மாற்று ஊடக மையம் கலைக்குழு, ‘மண்ணின் கலைகள்’, சென்னை) பெற்றுக்கொண்டு மிகச் சிறப்பான முறையில் குழுவோடு நாட்டுப்புறக் கலையை நிகழ்த்திக் காட்டினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளான பரதம், வில்லுப்பாட்டு, நாட்டுப்புற இசை நடனம், பறை இசை, செம்மொழிப் பாடல் (சேர்ந்திசை), நாடகம் (எமனின் தர்பார்) ஆகியன அனைவரும் பாராட்டத் தக்கவகையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. நன்றியுரையினை முனைவர் ஜெ. முனுசாமி வழங்க, தொகுப்புரையினை முனைவர் த. விஜய் அமிர்தராஜ் மற்றும் செல்வன் ஆனந்தன், செல்வன். தயாநிதி செல்வி பூஜாஸ்ரீ ஆகியோர் வழங்க, நாட்டுப்பண் பாடலுடன் நிகழ்ச்சி இனிதே நடந்தேறியது.